தர்மதேவதை மகாவிஷ்ணுவை நோக்கி இங்கு தவமிருக்க, பகவான் சுந்தரராஜனாகக் காட்சியளித்தார். இக்கோலத்தை அனைவரும் தரிசிக்க, பெருமாள் இங்கேயே எழுந்தருள வேண்டும் என்று தர்மதேவதை வேண்டிக் கொள்ள, பகவானும் அவ்வாறே அருளினார்.
மூலவர் அழகர், சுந்தரராஜன் என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் கள்ளழகர். தாயாருக்கு சுந்தரவல்லி என்பது திருநாமம். தர்மதேவதை, மலையத்வஜ பாண்டியன் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
மகாவிஷ்ணு திரிவிக்ரமனாக உலகளந்தபோது, அவரது பாதம் விண்ணில் சத்தியலோகம் வரை சென்றது. பிரம்ம தேவன் தன் கமண்டல நீரால் அவரது பாதத்திற்கு அபிஷேகம் செய்தார். அப்போது பகவான் சலங்கையில் பட்ட நீர் தெரித்து இங்கே விழுந்து ஒரு நதியாக பெருகியதால் 'சிலம்பாறு' என்று பெயர் உண்டாயிற்று.
சித்ரா பௌர்ணமியையொட்டி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் விசேஷம். மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருமண வைபவத்தைக் காண பெருமாள், அழகர் கோயிலிருந்து மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி ஸேவை ஸாதிக்கும் வைபத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
கோபுர வாசலில் 'பதினெட்டாம் படி கருப்பு' என்னும் தேவதை கோயில் உள்ளது. அதனால் அருகில் உள்ள வழியாக உள்ளே செல்லாம். மலை மீது 4 கி.மீ. தூரம் ஏறிச்சென்றால் 'நூபுர கங்கை' தீர்த்தம் உள்ளது.
இராமானுஜரும், மணவாள மாமுனிகளும் மங்களாசாஸனம் செய்த ஸ்தலம்.
பெரியாழ்வார் 34, ஆண்டாள் 11, திருமங்கையாழ்வார் 33, நம்மாழ்வார் 46, பூதத்தாழ்வார் 3, பேயாழ்வார் 1 பாசுரம், ஆக 128 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|